டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலை எதிர்கொள்ள, பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மொத்தம் 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு வழங்க 110 சமையல் கூடங்கள் தயாராக உள்ளன;

இன்று மட்டும் 32,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு இலட்சம் பால் பவுடர் மற்றும் ஒரு இலட்சம் நிவாரண தொகுப்புகள் இருப்பில் உள்ளன.

மீட்புப் பணிகளுக்காக, தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்க 103 படகுகள் மற்றும் NDRF, SDRF குழுவினர் 90 பேர் தயார் நிலையில் உள்ளனர். மழைநீரை வெளியேற்ற 1,496 மோட்டார் பம்புகள் (பல்வேறு திறன் கொண்டவை) பயன்படுத்தப்பட உள்ளன.

சாய்ந்து விழும் மரங்களை உடனடியாக அகற்ற 457 மர அறுவை இயந்திரங்களும், நீர் வெளியேற்ற 478 கனரக வாகனங்களும் தயாராக உள்ளன. மேலும், 22,000 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 20 சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. புகார்களுக்கு 1913 உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது.