டெல்லி குண்டு வெடிப்பு: வெடிபொருள் தயாரிக்க மாவு அரைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்திய மருத்துவர்

டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் மாவு அரைக்கும் இயந்திரத்தை வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் கார் குண்டு வெடிப்பை மேற்கொண்ட மருத்துவர் உமர் முகமதுவின் கூட்டாளி மருத்துவர் முசம்மில் அகமது கனாய்(Muzammil Shakeel Ganaie,), இந்த சம்பவத்திற்கு முன்னே பரிதாபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அவர், பரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரது வீட்டில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் வெடிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை அல்-ஃபலா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது ஓட்டுநர் ஒருவருக்கு மருத்துவர் கனாயின் அறிமுகம் கிடைத்துள்ளது.

தனது தங்கையின் திருமணத்திற்கு பரிசளிக்க போவதாக கூறி, அவரது வீட்டில் இருந்து மாவு அரைக்கும் இயந்திரம், கிரைண்டர் ஆகியவற்றை எடுத்து சென்று தனது வாடகை வீட்டிற்கு கானாய் மாற்றியுள்ளார்.

மாவு அரைக்கும் இயந்திரத்தில் யூரியாவை அரைத்து, அதன் மூலம் வெடிகுண்டுக்கு தேவையான ரசாயனங்களை உருவாக்கியுள்ளார்.

மேலும், யூரியாவில் இருந்து அம்மோனியம் நைட்ரேட்டை பிரித்தெடுக்க நீண்ட காலமாக மாவு மில்லை பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும்,வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து சுயமாக எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்பதை விளக்கும் 42 வீடியோக்களை மறையாக்கம் செய்யப்பட்ட செயலி மூலம் பெற்றுள்ளார்.

மேலும், தாக்குதல் தொகுதியை தீவிரப்படுத்தவும், உளவியலாக அவர்களை தயார் செய்யவும், தற்கொலை தாக்குதல்களை தியாகமாக கருதும் வீடியோக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், 2022 அக்டோபர் 23 அன்று கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு, 2022 நவம்பர் 20 அன்று மங்களூரு ஆட்டோரிக்ஷா குண்டுவெடிப்பு மற்றும் மார்ச் 1, 2024 அன்று பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகமது ஷாஹித் பைசல்(Mohammed Shahid Faisal) இந்த வழக்கில் முக்கிய பங்கு வகிக்கலாம் என கருதுகின்றனர்.

பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஃபைசல், “கர்னல்,” “லேப்டாப் பாய்,” “பாய்” மற்றும் “ஜாகிர் உஸ்தாத்” என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

2012 ஆம் ஆண்டில் தனது 28 வயதில் மாயமான இவர், லஷ்கர் ஈ தொய்பாவுடன் ஏற்பட்ட தொடர்பு மூலம் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து சிரியா-துருக்கி எல்லைக்கு குடிபெயர்ந்தார்.